யாழ்ப்பாணத் திருமண விழாவில் களோபரம்!

யாழ்.பெருமாள் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஏற்பட்ட களேபரத்தால் மணமக்கள் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,

கடந்த புதன்கிழமை பெருமாள் கோவில் கேணிக்குள் குளிக்கச் சென்ற 12 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

மேற்படி சிறுவனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறியதாயும் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அதாவது சிறுவனின் பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் வீட்டில் இருக்கும் அனைத்துப் பெண்களும் நீராடுவது வழமை.

அதேபோல் இச் சிறுவனின் சிறியதாயும் நீராடுவதற்காகக் கிணற்றடிக்குச் சென்றபோது வலிப்பு நோய் ஏற்பட்ட நிலையில் அவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

அதேசமயம் பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல் வங்கியில் பணியாற்றும் ஒரு உத்தியோகத்தரின் திருமண விழாவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இவ்வாறு கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த ஆட்டோ, கார் மற்றும் இதர வாகனங்களின் உதவிகள் கோரப்பட்டிருந்தது.

இருந்தும் மேற்படி வாகனங்களின் சாரதிகள் மறுப்புத் தெரிவிக்க, அடுத்த வீதியில் இருந்த ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மேற்படி பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் சிறுவனின் பூதவுடலைத் தகனம் செய்வதற்காக அப் பகுதியில் உள்ள அனைத்து ஆண்களும் சென்றிருந்ததால் அப் பகுதியில் பெண்கள் மட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிணற்றுக்குள் விழுந்த பெண் உயிரிழந்தது காட்டுத் தீ போல் அப் பகுதிகளில் பரவ தடிகள், பொல்லுகள் சகிதம் 200 ற்கும் மேற்பட்ட இளைஞர் குழு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்துக்கு வந்து அங்கிருந்த அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தது.

இதனால் திருமணத்திற்காக வந்திருந்த மக்கள் பீதியடைந்த நிலையில் ஓட்டம் எடுக்க திருமண விழாவே ஒரு போர்க்களமாகக் காட்சியளித்தது.

உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்க சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரைக் கண்டு இளைஞர் குழு ஓட்டம் எடுத்தது.

பின்னர் மாலை 4 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் தம்பதிகள் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருமண விழாவுக்கு வந்தவர்களுக்காக வழங்கப்படவிருந்த உணவுகள் அப்படியே கிடக்க, பொலிஸ் பாதுகாப்புடன் புதுமணத் தம்பதிகள் தங்கள் இல்லம் சென்றடைந்தனர்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

You must be logged in to post a comment.