மாற்றுத்திறனாளி இயக்குனருக்காகப் பறந்து வந்த ‘அழகி’ மோனிகா!

ஒரு மாற்றுத் திறனாளி இயக்குநரின் முதல் பட விழாவுக்காக, கேரளாவில் படப்பிடிப்பிலிருந்த மோனிகா விமானத்தில் வந்து கலந்து கொண்டு திரும்பினார்.

குறும்புக்காரப் பசங்க என்ற படத்தில் நடித்துள்ளார் மோனிகா. இந்தப் படத்தின் இயக்குநர் டி சாமிதுரை ஒரு மாற்றுத் திறனாளி.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் நடந்தது. கலைப்புலி தாணு, இயக்குநர் மனோஜ்குமார் உள்பட பலர் பங்கேற்று இசை குறுந்தட்டை வெளியிட்டனர்.

விழாவுக்கு வந்திருந்த மோனிகாவுடன் பேசினோம்…

‘குறும்புக்காரப் பசங்க’ளுடன் உங்களுக்கு என்ன வேலை..?

குறும்புக்கார பசங்கள்ல ஒருத்தரா வர்ற ஹீரோ சஞ்சீவுக்கு நான் தான் ஜோடி… நானும் கிராமத்துக் குறும்புகள் நிறைந்த சிந்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்…

முழுக்க முழுக்க கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பசுமையான இடங்கள்லதான் முழுப்படமும் நடந்துச்சு… இயக்குனர் சாமிதுரை திட்டமிட்டபடி 45 நாட்களில் படப்பிடிப்பை நடத்தினார்… இதுல என்ன விஷேசம்னா, குறும்புக்கார பசங்கதான் முழுக்க முழுக்க கள்ளக்குறிச்சியில் எடுக்கப்பட்ட முதல் படம்…

கதாநாயகன சஞ்சீவுடன் நடித்த அனுபவம்..?

சஞ்சீவ் நல்ல திறமையான நடிகர்… அவருடன் நடிப்பதை ஒரு போட்டியாக எடுத்துக் கொண்டுதான் நடித்தேன்… மற்றபடி படத்தின் பெயரில் தான் குறும்பு இருக்கிறதே தவிர நல்ல அன்பான டீம்…

ஒரு மாற்றுத்திறனாளி இயக்குனர் படத்தில் நடித்திருப்பது எப்படி இருந்தது..?

முதன் முதலாக இயகுனர் சாமிதுரையைச் சந்தித்த போது…இவர் எப்படி படம் பண்ணப்போகிறார் என்றுதான் யோசித்தேன். ஆனால் அவரது கதை சொல்லும் திறமை.. நடிகர்கள் உட்பட.. அத்தனை கலைஞர்களிடமும் வேலை வாங்கிய விதம் என்னை வியக்க வைத்தது. அவரது புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை அவரது இணை இயக்குனர்கள் மாரி மற்றும் சீனு ஆகியோர் மூலம் வெளிப்படுத்தினார்…

அழகில அறிமுகமானதிலிருந்து குறும்புக்கார பசங்க வரை அதே அழகியாகவே இருக்கிறீர்களே எப்படி..?

எல்லாம் கேமராமேன் கைவண்ணம்தான்! எப்பவுமே நான் அழகா இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், நான் எப்பவுமே உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். எனக்குக் கிடைத்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாகச் சந்திக்கிறேன்… ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாகவே கடக்க ஆசைப்படுகிறேன்…

சமீபத்தில் திரைக்கு வந்த வர்ணம் ,முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நல்ல வேடங்களில் நடித்திருந்தும் தமிழில் அவ்வளவாக உங்களைப் பார்க்க முடியவில்லையே!

நான் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். தவிர மலேசியத் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து கன்னடப் படம் ஒன்று…அப்புறம் ‘கதைபறையும் போள்’ இயக்குனர் மோகனன் இயக்கத்தில் ‘தற்சமயம் 916’ என்ற மலையாளப்படம்… தமிழில்தான் இப்பொழுது குறும்புக்கார பசங்க வெளியாக இருக்கிறதே!

பேட்டி முடிந்த கையோடு கோழிக்கோடுக்கு பறந்தார் மோனிகா!

Pin It

One thought on “மாற்றுத்திறனாளி இயக்குனருக்காகப் பறந்து வந்த ‘அழகி’ மோனிகா!

Leave a Reply