நாடி ஜோதிடம் உண்மையா? – WINYARL
You Are Here: Home » ஜோதிடம் » 9 கோள்கள் » நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம்… நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்களை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கணித்துச் சொல்லும் ஒருவகை ஜோதிட முறை என்பது பலரது கருத்து. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது சிலரது தனிப்பட்ட கருத்து.
இவற்றில் எது உண்மை?

நாடி எங்கெல்லாம் பார்க்கிறார்களோ, அங்கெல்லாம் விசிட் ஒரு விசிட் அடித்தால், ஒருவேளை… நாடி ஜோதிடம் என்பது உண்மையாகத்தான் இருக்குமோ என்றுதான் என்னத் தோன்றுகிறது. ஆம்… நாடி பார்க்கப்படுகிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் தங்களது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள தவம் கிடக்கிறது.

நாடி ஜோதிடம் என்பது என்ன? அது எப்படி வந்தது? அதை அறிமுகப்படுத்தியது யார்?

நாடி ஜோதிடம் என்பது ஒருவரது கைரேகையைக் கொண்டு, அவரைப் பற்றி ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து, அதிலுள்ள அவர் தொடர்பான தகவல்களை வாசித்து விளக்கி கூறுவதுதான். நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஏடுகளை புரட்டிப்பார்த்து பலன் சொல்கிறார்கள். ஆண்கள் என்றால் வலது கட்டைவிரல் (பெருவிரல்) கைரேகையும், பெண்கள் என்றால் இடது கட்டைவிரல் கைரேகையும் பெறப்படுகிறது.

நாடி என்று சொல்லப்படும் ஏடுகள் பனை ஓலையினால் ஆனவை. ஒரு காலத்தில் தமிழகத்தில் முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக திகழ்ந்தது இந்த பனை ஓலை ஏடுகள்தான். இதற்காக பனை ஓலையை சரியான முறையில் தயார் செய்து, அதில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். நாடி ஜோதிடம் கூறும் தகவல்களும் இதுபோன்ற பனை ஓலைகளிலேயே எழுதப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த ஓலையில் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் பழந்தமிழ் வட்டெழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளன. இந்த ஓலைச் சுவடிகளை எழுதியது யர் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 2 ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தவை எனக் கருதப்படும் இந்த சுவடிகள் சப்த ரிஷிகளான அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி ஆகியோரால் எழுதப்பட்டவை என்று நம்பப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஓலைகள் கிடைக்கின்றன. வாசிப்புகளும் அவர் பெயரிலேயே நடைபெறுகின்றன.

தமிழர்களைத் தேடி உலகம் முழுக்க இந்த நாடிகள் பயணப்பட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்கிற ஊரில்தான் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் நாடி ஜோதிடம் பார்க்க பயன்படுத்தப்படும் ஓலைச்சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றியபோது, இந்தியர்களின் பாரம்பரிய விஷயங்களை அறிந்து கொள்ள அதிக

அக்கறை காண்பித்தார்கள். ஓலைச்சுவடிகளில் மருத்துவ குறிப்புகள், எதிர்காலம் குறித்த குறிப்புகள், மூலிகைகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்பட்டதால் அவற்றில் சிலவற்றை தங்களது நாட்டுக்கே எடுத்துச் சென்றுவிட்டனர்.

 

அதேநேரம், பழங்கால ஓலைச்சுவடிகளின் மகிமையை அறிந்த அக்கால தமிழகத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள், தங்களுக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து பத்திரப்படுத்திக் கொண்டனர். சில ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு வசதியின்றி கரையான்களுக்கு இரையாகிவிட்டன. சில இடங்களில் இந்த ஓலைச்சுவடிகள் ஏலம் விடப்பட்டு அதை வாங்கிச் சென்றவர்களும் உண்டு.

இப்படியாக சப்த ரிஷிகள் எழுதியதாக கருதப்படும் ஓலைச்சுவடிகள் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்தன. இவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றன.

இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இந்த ஒலைச் சுவடிகளையே பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். பரம்பரையாக ஒருவர் பின் ஒருவராக இக்கலையை அவர்கள் அறிந்து வருகின்றனர்.

என்றாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாடி ஜோதிடம் இங்கே பார்க்கப்படும் என்று விளம்பரப்படுத்தி பலர் உலாவி வருகின்றனர். இதை அவர்கள் ஒரு வியாபாரமாகவே செய்கிறார்கள். இவர்களில் சிலர் தங்களுக்கு என்று இணையதளத்தை துவக்கி, வெளிநாடு வாழ் தமிழர்களையும் கவர்ந்து வருகின்றனர். அதற்காக கணிசமான ஒரு தொகையை கறந்து விடுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடி பார்ப்பதற்கான செலவு 200 – 300 ரூபாயிலேயே முடிந்து விடுகிறது. பரிகாரம் என்றால் அதற்கு தனியாக பெரிய அளவில் செலவிட வேண்டியது இருக்கும். என்றாலும், ஆரம்பத்தில் நாடியில் சரியான பதில் வந்தால் மாத்திரமே பணம் வாங்குகிறார்கள். சரியான பதில் வரவில்லை என்றால் இன்னொரு நாள் வாருங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

 

நாடி ஜோதிடம் எப்படி பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக அறிய முடிவெடுத்தபோது வைத்தீஸ்வரன் கோவிலைவிட காஞ்சீபுரத்திலேயே நாடி ஜோதிடம் பார்க்கும் பிரபலங்கள் இருக்கிறார்கள் என்கிற தகவல் நமக்கு கிடைத்தது. உடனே காஞ்சீபுரத்திற்கு பயணித்தோம்.

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அந்த 3 மாடி கட்டிடம் அமைந்திருந்தது. அந்த நகரின் பிரபல நாடி ஜோதிடர் ஒருவர் அங்கே நாடி பார்த்து வருகிறார்.

நம்முடன் வந்த ஒருவர் ஏற்கனவே அவரிடம் நாடி பார்த்து உள்ளார். சரியான தகவல் வராத காரணத்தால் அவரை மற்றொரு நாளில் வருமாறு கூறியிருக்கிறார். நாடி ஜோதிடர் குறிப்பிட்ட நாளில் நாமும் அவரோடு அங்கே சென்றோம்.

அந்த 3 மாடி கட்டிடத்தின் 3 தளத்திலுமே ஏகப்பட்ட கூட்டம். ஒருவேளை… இடம் மாறி வந்து விட்டோமா என்று நினைத்தபோது, நாடி பாக்கத்தானே வந்திருக்கீங்க… என்று ஒருவர் நம்மிடம் கேட்க, ஆமாம் என்றோம். அவரும் நமக்காக ஒரு டோக்கனை தந்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். ஒரு ஓரமாக நானும் உடன் வந்தவரும் அமர்ந்து கொண்டோம்.

நாடி பார்க்க வந்தவர்களை நோட்டமிட்டேன். அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். சில பெண்களும் இருந்தனர். யாருடைய முகத்திலும் பொங்கி வழியும் மகிழ்ச்சி இல்லை. நாடியில் நல்ல பதில் வரவேண்டும் என்கிற அவர்களது உள்ளத் தவிப்பு முகத்திலும் அப்பிக்கிடந்தது. அவர்களில் ஒருசிலருடன் வந்திருந்த குழந்தைகள்தான் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 

முதன் முதலாக நாடி பார்க்க வருபவர்களிடம் என்ன கேட்கிறார்கள் என்ற கேள்வியை என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். அவரும், ஏற்கனவே இங்கே வந்த விஷயத்தை ஆர்வமாகச் சொன்னார்.

நான் பார்க்கும் வேலை நிரந்தரம் ஆகுமா? மும்பையில் என்னை பிரிந்து வசிக்கும் எனது மனைவி மீண்டும் என்னுடன் வாழ சென்னைக்கு வருவாரா? என்பதை அறிந்து கொள்வதற்காக அன்றைக்கு வந்திருந்தேன். நாடி ஜோதிடரிடம் சில நாடிக் கட்டுகள் இருந்தன. என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்டவர் அடுத்த நிமிடமே நாடிக்கட்டு ஒன்றில் இருந்து ஒரு ஓலைச்சுவடியை உருவி படித்தார்.

உங்களது பெயர் வேல் என்று முடியும் என்றார். நான் இல்லை என்றேன். அடுத்ததாக உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றார். நான் திருமணம் ஆகிவிட்டது என்றேன். அடுத்ததாக அவர், உங்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள் என்றார். நான், திருமணம் இப்போதுதான் நடந்தது. குழந்தை இல்லை என்றேன்.

உடனே, ஓலைச்சுவடியை எடுத்த நாடி ஜோதிடர், இன்றைக்கு உங்களுக்கான ஓலைச்சுவடி வரவில்லை என்று கூறி, இன்று வரச் சொன்னார். அன்றைக்கு எனக்கான நாடி கிடைக்காததால் கட்டணத்திற்குரிய பணம் வாங்கவில்லை என்று, அன்று நடந்ததைச் சொன்னார்.

உடன் வந்தவர் சொன்னதைப் பார்த்தால், ஒருவேளை போட்டு வாங்கி பதில் சொல்வது என்கிற பாலிசியை நாடி பார்க்கிறவர்கள் பின்பற்றுகிறார்களோ என்கிற சந்தேகம்தான் நமக்கு வந்தது.

அப்போது நாடி ஜோதிடரின் உதவியாளர் வேகமாக எங்களிடம் வந்து, அடுத்து நீங்கள்தான் நாடி பார்க்கச் செல்ல வேண்டும் என்றார். நாமும் ஆர்வமாக, உடன் வந்தவருடன் நாடி பார்ப்பவரின் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றோம்.

நெற்றி நிறைய விபூதியும், அதன் நடுவே குங்குமமும் பூசிக் கொண்டு ஒரு வெள்ளை தாடிக்காரர் அந்த ஏ.சி. அறையில் கம்பீரமாக இருந்தார். அவர்தான் நாடி ஜோதிடர்.

என்னை தனது குடும்ப நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உடன் வந்தவர் நாடி பார்க்க ஆரம்பித்தார்.

தனது மேஜையில் சில நாடிக் கட்டுகளை எடுத்து வைத்த அந்த நாடி ஜோதிடர், சட்டென்று கண்களை மூடி முனுமுனுத்தார். ஏதோ மந்திரத்தை ஜெபிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. நாம் நாடி ஜோதிடரின் செய்கைகளை உன்னிப்பாக கவனிக்க, உடன் வந்தவர் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் என்ற வேண்டுதலோடு பயபக்தியாக அமர்ந்திருந்தார்.

மந்திரத்தை ஜெபித்து முடிந்ததும், நாடிக்கட்டுகளில் இருந்து ஒரு ஓலைச்சுவடியை உருவி எடுத்தார் நாடி பார்ப்பவர். அவர் கேள்வி கேட்க, உடன் வந்தவர் அதற்கான பதிலை கூறினார்.

‘உங்களது தந்தையின் பெயர் வேல் என்று முடியும்.’

 

‘ஆமாம். அவரது பெயர் சக்திவேல்.’

 

‘உங்கள் பெயருக்கும், முருகப்பெருமானுக்கும் சம்பந்தம் உண்டு.’

 

‘ஆமாம். எனது பெயர் பாலசுப்பிரமணி.’

 

‘உங்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். நீங்கள் நான்காவது நபர்.’

 

‘ஆமாம்.’

 

‘உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.’

 

‘ஆமாம்.’
‘ஆனால், மனைவியை பிரிந்து வாழ்கிறீர்கள்?’
‘ஆமாம்.’
‘அப்படியானால் உங்களுக்கான நாடி இதுதான்’ என்று சொன்னார் நாடி ஜோதிடர்.

தொடர்ந்து, நாடி பார்க்கும் ஓலைச்சுவடியை வைத்தே நாடி பார்க்க வந்தவருக்கு ஜாதகம் கணித்தார். ராசி, நட்சத்திரம், பிறந்த வருடம் – தேதி எல்லாமே சரியாக இருந்தது. ஒன்றே ஒன்றுதான் இடித்தது. நாடி பார்க்க வந்தவர் பிறந்தது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி. நாடியிலோ சனிக்கிழமை பிறந்ததாக வந்தது.

அது எப்படி என்று நாம் கேட்க, ஜாதக கணிப்பின்படி சூரிய உதயம் தொடங்கி அடுத்த சூரிய உதயம் வரைதான் ஒருநாள். அதனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி என்பது ஜாதகரீதியான கணிப்பின்படி சனிக்கிழமைதான் வரும் என்று விளக்கம் கொடுத்தார் நாடி ஜோதிடர்.

தொடர்ந்து, நம்முடன் நாடி கேட்க வந்தவருக்கு ஒரு பரிகாரத்தைச் சொல்லி, அதை செய்தால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்றார். அவரும் சரி என்று தலையாட்டிவிட்டு, நாடி பார்த்ததற்கு 300 ரூபாய் கட்டணமாக கொடுத்துவிட்டு எழுந்தார்.

– ஆக, இப்படித்தான் நாடி பார்க்கப்படுகிறது.

பொதுவாக நாடி பார்க்கும் ஜோதிடர்கள் பரிகாரத்தையும் கூடவேச் சொல்கிறார்கள். அவர்களில் சிலர், தாங்களே அந்த பரிகாரத்தை செய்வதாகக் கூறி அதற்காக ஒரு தொகையையும் வாங்கி விடுகிறார்கள்.

கடந்த காலத்தை மிகத் துல்லியமாக கூறும் நாடிகள், எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பது இல்லை. அனுமான அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது என்பது நாடி பார்க்க வருபவர்களில் பலரது குற்றச்சாட்டு.

 http://nellaicharal.blogspot.com/

– நெல்லை விவேகநந்தா

About The Author

Number of Entries : 4935

Leave a Comment

You must be logged in to post a comment.

© 2011 Powered By winyarl

Scroll to top