சினிமாதான் என் லட்சியம்: நடிகர் சேத்தன்

விடாது கருப்பு தொடரில் அப்பாவி இளைஞனாய் அறிமுகம் ஆகி உதிரிப்பூக்கள் தொடர் மூலம் எண்ணற்ற பெண் ரசிகைகளை தக்கவைத்துக்கொண்டிருப்பவர் நடிகர் சேத்தன். இப்போது மாலை 6.30 மணியாகிவிட்டாலே உதிரிப்பூக்கள் சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சேத்தனின் எதார்த்தமான நடிப்புதான். அந்தத்தொடரில் தனது ஆழமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதின் மூலம் பெண் ரசிகைகளின் பேராதரவிற்கு உரியவராகிவிட்டார் சேத்தன். தனது சின்னத்திரை பயணம் குறித்தும், நீண்டநாள் லட்சியம் குறித்தும் நம்மிடையே அவர் பகிர்ந்து கொண்டார்.

பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு விற்பனை பிரதிநிதியாய் வாழ்க்கையை தொடங்கினேன். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வமே என்னை இங்கு கொண்டுவந்திருக்கிறது. மின்பிம்பங்கள் நிறுவனத்திற்கு என்னுடைய பயோடேட்டாவை அனுப்பினேன். மர்மதேசம் தொடரில் கருப்பு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவே எனக்கு திருப்பு முனையாக அமைந்தது.

நல்ல கேரக்டராக இருந்தாலும் சரி, நெகட்டிவ்வான கேரக்டராக இருந்தாலும் சரி. நமக்குக் கிடைக்கும் புகழ் எல்லாமே அந்த கேரக்டருக்குக் கிடைக்கும் மரியாதைதான். டிவி எப்பவும் பெண்கள் மீடியம். அதில் நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும், பெண்களுக்கு நிச்சயம் பிடித்துவிடும். எனக்கு நடிப்பதற்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நானும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

நானும் என் மனைவி தேவதர்ஷினியும் ஒரே மீடியாவில் இருப்பது எங்களுக்கு சவுகரியானமான விசயமாக இருக்கிறது. வெவ்வேறு தொடர்களில் நடித்தாலும் ஒரே தொடரில் நடித்தாலும் ப்ளஸ்தான். உழைப்புக்கு உழைப்பு. வருமானத்திற்கு வருமானம். ஒரே தொடரில் நடிக்கும் போது, அதிக நேரம் ஒன்றாக இருக்கிறோம். நிறைய விஷயங்களை பேசிக்க முடியும்.

என்னுடைய சினிமா ஆசை இப்பொழுதுதான் நிறைவேற ஆரம்பித்திருக்கிறது. சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிஸியாகிவிட்டேன். அதனால் சினிமாவில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பத்து வருஷம் ஆகிவிட்டது. மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன். ஏனென்றால் அதுதான் என்னுடைய கனவு! இப்போது ‘பூக்கடை ரவி’ என்ற படத்தில் என்-கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா நடிச்சிருக்கேன். ‘முத்திரை’ படத்தில் லீகல் அட்வைஸரா நடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. இப்போதைக்கு நிறைய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

சினிமா இயக்குவதற்கான முயற்சியும் இருக்கு. யோசனைகளும் இருக்கு. நான் சின்னத் திரையிலிருந்து வருவதால் எப்படிப்பட்ட படத்தைத் தருவேன் என்கிற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். நிச்சயமாக இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகத்தான் அது இருக்கும். ஆனால் வழக்கமான படமாக இருக்காது. தனியாகத் தெரியும் வகையில் இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார் சேத்தான். வாழ்த்துக்கள் கூறி விடை கொடுத்தோம்.

Pin It

Leave a Reply