கொல்லப்பட்ட கடாபி உடலை வைத்து லிபியர்கள் விளையாடிய கொடூர காட்சிகள்…!

லிபிய புரட்சிப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் உடலை, புரட்சிப் படையினர் மிகவும் மோசமாக கையாண்ட செயல் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் காட்சிகளை சிலர் யூடியூபில் போட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி புரட்சிப் படையினரிடம் சிக்கிக் கொண்டார் கடாபி. அவரை புரட்சிப் படையினர் சரமாரியாக அடித்து உதைத்தும், தெருவில் இழுத்துச் சென்று தாக்கியும், பின்னர் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

அதன் பின்னர் அவரது உடலை ஒரு மீன்பதப்படுத்தும் கிடங்கில் போட்டு வைத்திருந்தனர். பிறகு அவரது உடல் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் கடாபியின் இறந்த உடலை வைத்து புரட்சிப் படையினர் விளையாடும் வீடியோ காட்சிகள் யூடியூபில் வெளியாகியுள்ளன.

ஏதோ பொம்மையை வைத்து விளையாடுவது போல கடாபியின் உடலை வைத்து கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் புரட்சிப் படையினர்.

இந்த வீடியோ காட்சி, சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்துக்கு எச்சரிக்கை விடுவது போல அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஒரு நிமிடத்திற்கு இந்த வீடியோ ஓடுகிறது. இந்த வீடியோவை கடாபி கொல்லப்பட்ட அன்று எடுத்துள்ளதாக தெரிகிறது.

கடாபியின் உடல் அடங்கிய ஆம்புலன்ஸ் வேனைச் சுற்றிலும் புரட்சிப் படையினர் நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் உரத்த குரலில் கடாபியைத் திட்டி கோஷமிடுகிறார். கடாபியின் உடலில் துணி இல்லை. ரத்தம் தோய்ந்து கிடக்கிறது.

ஒருவர் கடாபியின் தலையைத் தூக்கிப் பிடித்து கேலியாக ஏதோ சொல்கிறார். பின்னர் கடாபியைக் கேலி செய்து நடித்துக் காட்டுகிறார். பலர் இதை செல்போனில் படம் பிடிக்கின்றனர். பின்னர் வேனை விட்டு உடலைத் தூக்கி ஒரு ஸ்டிரெச்சரில் போடுகின்றனர்.

இந்த வீடியோ காட்சியை சிரிய அரசு எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த சமி அல் ஹம்வி என்பவர் டிவிட்டரில் போட்டுள்ளார். அதில், யாராவது இதை அஸ்ஸாத்துக்கு அனுப்பி வைத்தால் நல்லது என்று எழுதியுள்ளார் சமி.

Pin It

Leave a Reply