ஆடி மாத ராசி பலன்கள் – மீனம் – WINYARL
You Are Here: Home » ஜோதிடம் » ஆடி மாத ராசி பலன்கள் – மீனம்

ஆடி மாத ராசி பலன்கள் – மீனம்

மீனம்:நிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாகக் கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைத்தூக்கி விடுவீர்கள். உங்கள் ராசிநாதனான குரு 3ல் முடங்கிக் கிடப்பதால் சில நேரங்களில் எதிலுமே ஆர்வமில்லாமல் இருப்பீர்கள். முதல் முயற்சியிலேயே எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். உங்கள் திறமை மீது உங்களுக்கு சந்தேகம் வரும். கேது வலுவாக இருப்பதால் புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். ஆன்மிகவாதிகள் உதவுவார்கள். இரட்டை வேடம் போட்டவர்களை ஒதுக்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் சாதுர்யமான பேச்சால் பழைய சச்சரவுகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

எதிர்பார்த்த பணம் மொத்தமாக வராவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். தாய்வழி உறவினர்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். சூரியன் 5ல் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த ஊரில் நடைபெறும் பொது விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சொத்துப் பிரச்னைகளை உணர்ச்சிபூர்வமாக அணுக வேண்டாம். சுக்கிரன் வலுவாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்றவை நல்ல விதத்தில் முடியும். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். வாகனம் வாங்குவீர்கள். 7ம் வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்து நிற்பதால் மனைவிக்கு சோர்வு, களைப்பு, சிறு விபத்துகள் வந்து செல்லும்.

எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, நாவடக்கம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் திருமணமாக கைகூடும். பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். மாணவர்களே! கொஞ்சம் செலவு செய்து போராடி நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேருவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடைக்கே வருவார்கள்.

பங்குதாரர்களை விட்டுப் பிடியுங்கள். கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். புரோக்கரேஜ், ஹோட்டல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளுடன் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயிகளே! சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். வற்றிய கிணறு சுரக்கும். அதிரடி முடிவுகளால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 18, 19, 22, 23, 24, 30, 31 ஆகஸ்ட் 1, 2, 4, 8, 9, 10, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதம் வந்து போகும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடியில் அருள்பாலிக்கும் பிரத்யங்கராதேவியை தரிசித்து வாருங்கள். தாயை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவுங்கள்.

About The Author

Number of Entries : 4935

Leave a Comment

You must be logged in to post a comment.

© 2011 Powered By winyarl

Scroll to top